முக்கிய செய்திகள்


புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநராக பாஜக தலைவர்களில் ஒருவரும், நாட்டின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியுமான கிரண் பேடி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் மாளிகை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், "புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநராக கிரண் பேடியை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்; அவர் பதவியேற்கும் நாள் முதல் இந்த உத்தரவு அமலுக்கு வரும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கிரண் பேடி மகிழ்ச்சி: புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதற்கு கிரண் பேடி (66) மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: மத்திய அரசின் முடிவைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். என் மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கையை இது காட்டுகிறது.
புதுச்சேரியில் இருந்து நான் ஐபிஎஸ் அதிகாரியானேன். ஆதலால், அங்கு துணைநிலை ஆளுநராகப் பணியாற்றுவதற்கு ஆர்வமாக இருக்கிறேன். மிஸோரம், கோவா, சண்டீகர் ஆகிய இடங்களில் ஐபிஎஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டேன். ஆனால், அந்தமான் மற்றும் புதுச்சேரியில் பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆதலால், புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதை எனக்கு கிடைத்த அரிய வாய்ப்பாக கருதுகிறேன் என்றார் அவர்.
புதுச்சேரி சட்டப்பேரவைக்கு அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில், மொத்தமுள்ள 30 இடங்களில் காங்கிரஸ்-திமுக கூட்டணி 17 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த தேர்தல் முடிவுகள் வெளிவந்து சில நாள்களில், புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநராக கிரண் பேடியை மத்திய அரசு நியமித்துள்ளது. அந்த மாநிலத்தின் 4ஆவது பெண் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி ஆவார். இதற்கு முன்பு, அந்தப் பதவியை சந்திராவதி (1990), ராஜேந்திர குமாரி வாஜ்பாய் (1995-1998), ரஜனி ராய் (1998-2002) ஆகியோர் வகித்துள்ளனர்.
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பிறகு, புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்த வீரேந்திர கட்டாரியா கடந்த 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12ஆம் தேதி நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, அந்தப் பதவியில் இதுவரை யாரையும் நியமிக்காமல் மத்திய அரசு இருந்தது. புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியை அந்தமான்-நிகோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநர் அஜய் சிங் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார்.

Tags:

No Comment to " புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கிரண் பேடி நியமனம் "