முக்கிய செய்திகள்


மும்பை,
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக அனுராக் தாகூர் நேற்று தேர்வு செய்யப்பட்டார். லோதா கமிட்டியின் பரிந்துரைகளில் நடைமுறைக்கு உகந்தவை அமல்படுத்தப்படும் என்று பின்னர் அறிவித்தார்.
கிரிக்கெட் வாரிய தலைவர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தனிப்பட்ட சேர்மனாக ஷசாங் மனோகர் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இந்த பொறுப்புக்கு வருபவர் தங்களது கிரிக்கெட் வாரியத்தில் எந்த பொறுப்பையும் வகிக்கக்கூடாது என்பதால் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) தலைவர் பதவியை ஷசாங் மனோகர் ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான சிறப்பு பொதுக்குழு கூட்டம் மும்பையில் நேற்று நடந்தது. மூத்த துணைத்தலைவர் சி.கே.கண்ணா தலைமை தாங்கினார். இதில் தலைவர் பதவிக்கு இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் அனுராக் தாகூர் மட்டுமே விண்ணப்பித்து இருந்ததால் அவர் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் உலக கிரிக்கெட் அரங்கில் பணக்கார மற்றும் அதிகாரமிக்க அமைப்பான இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 34–வது தலைவரானார். அவர் வகித்த செயலாளர் பதவிக்கு மராட்டிய கிரிக்கெட் சங்க தலைவரும், தொழிலதிபருமான அஜய் ஷிர்கே தேர்வானார்.
அனுராக் தாகூர் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராகியிருக்கும் 41 வயதான அனுராக் தாகூர் பாரதீய ஜனதா கட்சியின் எம்.பி.யாகவும் இருக்கிறார். இமாச்சல பிரதேச மாநிலம் ஹமிர்புர் மாவட்டத்தை சேர்ந்தவர். இமாச்சல பிரதேச முன்னாள் முதல்–மந்திரி பிரேம்குமார் துமாலின் மகன் ஆவார். கிரிக்கெட் வீரர்களுடன் இவருக்கு நெருங்கிய நட்புறவு உண்டு. 2017–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை இந்த பொறுப்பில் நீடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.பி.எல். சூதாட்ட பிரச்சினை எதிரொலியாக சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக அமைப்பில் பல்வேறு மாற்றங்களை செய்ய நீதிபதி லோதா கமிட்டி பரிந்துரை செய்தது. கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் 70 வயதுக்கு மேல் பதவியில் இருக்கக்கூடாது, ஒருவர் ஒரே சமயத்தில் ஒரு பதவிக்கு மேல் வகிக்கக்கூடாது, கிரிக்கெட் வாரியத்தில் ஒரு மாநிலத்துக்கு ஒரு ஓட்டுரிமை என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் அடங்கும். ஆனால் பரிந்துரைகளில் சிலவற்றை அமல்படுத்துவதில் சிக்கல் இருப்பதாக கூறி கிரிக்கெட் வாரியம் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டு அது தொடர்பான வழக்கு நடந்து வருகிறது.
பேட்டி இத்தகைய கடினமான சூழலில் அனுராக் தாகூர் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியை ஏற்று இருக்கிறார். முன்னாள் முதல்தர கிரிக்கெட் வீரரான அனுராக் தாகூர் நிருபர்களிடம் கூறியதாவது:–
கிரிக்கெட்டில் எனது பயணம் 16 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. கவுரவமிக்க இந்த பதவியை பணிவோடு ஏற்றுக்கொள்கிறேன்.
லோதா கமிட்டியின் பரிந்துரையை அமல்படுத்துவது தொடர்பாக கேட்கிறீர்கள். எங்கெல்லாம் சவால்கள் இருக்கிறதோ அங்கு நமக்கு வாய்ப்பும் இருக்கிறது. எல்லாம் அவரவர் பார்வையை சார்ந்தது. நான் செயல்படுவதற்கான வாய்ப்பாக அதை பார்க்கிறேன். லோதா கமிட்டியின் சிபாரிசுகளை விட்டு நாங்கள் ஓடிவிட மாட்டோம். ஆனால் நடைமுறைக்கு சாத்தியமான பரிந்துரைகளுக்கு நாங்கள் சாதகமாக செயல்படுவோம். அது மட்டுமின்றி லோதா கமிட்டியின் பரிந்துரைக்கு முன்பே நாங்கள் பல சீர்திருத்தங்களை செய்து விட்டோம். இந்த தேசத்தின் மிக பிரபலமான இந்த விளையாட்டு தொடர்பான எங்களது பொறுப்பை நாங்கள் உணர்ந்துள்ளோம்.
முன்னேற்றத்துக்காக... லோதா கமிட்டியின் 75 சதவீத பரிந்துரைகளை அமல்படுத்தி விட்டதாக முந்தைய தலைவர் ஷசாங் மனோகர் கூறியுள்ளார். அவர் சிறந்த நிர்வாகி. லோதா கமிட்டியின் பரிந்துரைகளை 100 சதவீதம் அமல்படுத்துவது சாத்தியமில்லை என்பதையும் அவர் தெளிவாக கூறியிருக்கிறார். கிரிக்கெட் வாரியத்தின் முன்னேற்றத்துக்காக தொடர்ந்து உழைப்போம்.  இவ்வாறு அனுராக் தாகூர் கூறினார்.
பயிற்சியாளர் பதவிக்கு ஜூன் 10–ந்தேதி வரை விண்ணப்பிக்க கெடு

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவர் அனுராக் தாகூர் நிருபர்களிடம் கூறுகையில், ‘இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கான விளம்பரம் வெளியிடப்படும். பயிற்சியாளர் பதவிக்கு ஜூன் 10–ந்தேதிக்குள் யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். அதன் பிறகு பட்டியலை இறுதி செய்வோம்’ என்றார். இதன் மூலம் ஜூன் 11–ந்தேதி தொடங்கும் ஜிம்பாப்வே தொடருக்கு இந்திய அணி முழு நேர பயிற்சியாளர் இல்லாமல் செல்வது உறுதியாகி இருக்கிறது. கிரிக்கெட் வாரியத்தின் ஆலோசனை கமிட்டி உறுப்பினர்களில் ஒருவரான சவுரவ் கங்குலி, பயிற்சியாளரை நியமிக்க ஓரிரு மாதங்கள் ஆகும் என்று கூறியுள்ளார்.

இரு தொடர்களுக்கான இந்திய அணி இன்று தேர்வு
இந்திய அணி ஜூன் 11–ந்தேதி முதல் 22–ந்தேதி வரை ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. அதைத் தொடர்ந்து ஜூலை–ஆகஸ்டு மாதங்களில் வெஸ்ட் இண்டீசுக்கு சென்று 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இவ்விரு தொடர்களுக்கான இந்திய அணி மும்பையில் இன்று (திங்கட்கிழமை) தேர்வு செய்யப்பட இருப்பதாக அனுராக் தாகூர் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். ஜிம்பாப்வே தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படுமா என்று கேட்டதற்கு, அது குறித்து சந்தீப் பட்டீல் தலைமையிலான தேர்வு குழுவினர் முடிவு செய்வார்கள் என்றும் அனுராக் தாகூர் பதில் அளித்தார். ஐ.பி.எல். போட்டியில் அசத்திய குணால் பாண்ட்யா, கருண் நாயர் ஆகியோருக்கு ஜிம்பாப்வே தொடரில் வாய்ப்பு கிடைக்கலாம். இதே போல் ரஞ்சி கிரிக்கெட்டில் ரன் மழை பொழிந்த மும்பை இளம் வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் டெஸ்ட் அணிக்கு தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.

Tags:

No Comment to " இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக அனுராக் தாகூர் தேர்வு ‘நடைமுறைக்கு உகந்த லோதா கமிட்டியின் பரிந்துரை அமல்படுத்தப்படும்’ என்று அறிவிப்பு "